Saturday, September 4, 2010

நொந்துகொண்டு சும்மா இருக்கக் கூடாது

காதலியை சந்திக்க நடு இரவில் தனியாக புறப்பட்டான். ஊருக்குள் நுழையும் போது படுத்திருந்த நாய் ஒன்று இவனை பார்த்ததும் உர்ர்ர்ர் என்று ஆரம்பித்தது. சரி எப்படியாவது நாயைக் கடக்க வேண்டும் என்று நினைத்தவன், நாய் படுத்திருக்கும் எதிர் திசையில் மெதுவாக நுழைய முயன்றான். படுத்திருந்த நாய் அவனைப் பார்த்து குறைக்கத் தொடங்கியது. என்னடா இது வம்பா இருக்கிறதே என்று சற்று வேகமாக நடக்கத் தொடங்கினான். நாயும் அவனைப் பின் தொடர்ந்தது. சரி இனி வேலைக்கு ஆகாது என்று நினைத்தவன் வேகமாக ஓடத் தொடங்கினான். ஆனால் விடுவதாக இல்லை அந்த நாய். அதுவும் பின்னாலேயே ஓடிவர ஆரம்பித்தது. அந்த ஊரில் உள்ள எல்லா தெருக்களையும் சுற்றி ஓடி கலைப்படைந்த அவன் ஒரு முட்டு சந்துக்குள் தப்பித்துப் போக வழியில்லாமல் மாட்டிக்கொண்டான்.

திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. இந்த நாய்க்கு பயந்து நாம் ஏன் ஓட வேண்டும் அதை எப்படியாவது அடித்து துரத்தி விடலாம் என்று நினைத்தான். அதற்காக அங்கே கிடந்த கல்லை எடுக்க முயற்சித்தான். அது பெரிய கல் போலும், வெகு நாட்களாக மண்ணில் புதைந்து மேலே சிறிதாக தெரிந்துள்ளது. மண்ணுக்கு அதிகளவு புதைந்திருந்ததால் அதை அவனால் எடுக்க முடியவில்லை. நாய் பக்கத்தில் வந்துவிட்டது. அப்போது நொந்து கொண்டு அவன் கூறினான். "என்னடா ஊர் இது, கல்லை கட்டிப்போட்டிருக்கிறார்கள், நாயை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்" என்று. (பாரசீகக் கவிஞனின் வரிகள் இது.)


நாம் இந்த சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிற உணர்வு வருகிறது. நொந்து கொள்ளத்தான் முடியுமே தவிர எதிர்த்தால் இப்படியாகிவிடுவோம்.


"நம்முடைய கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்களே, அவர்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையைக் குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் (கோட்டை) முற்றுகை என்பார்கள். ஓர் அரசு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவர்கள் அணி வகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வர வேண்டும் என்றும் முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இப்படித் தான் கம்யூனிஸ்ட்டுகளுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி கோட்டை முற்றுகை என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம். தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை வன்முறைச் சேட்டைகளை கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி, சிறுதாவூர் சீமாட்டி, வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்."

(2010 ஆக. 30 முதலமைச்சர் கலைஞர் அறிக்கையிலிருந்து)


அதையும் மீறி விளக்கம் கொடுத்தால், அப்படியே விட்டுவிட்டு, அடுத்த மரத்திற்கு தாவிக் கொள்வதற்கு சொல்லியா தரவேண்டும். இதோ பாருங்க,


"இதிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களாவது தாங்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்பட நியாயம் உண்டு. அதற்காக அவர்கள் நம் மீது கனல் கக்கவும் உரிமை உண்டு. ஆனால் இதில் இடையிலே புகுந்து கொண்டு ஜெயலலிதா என்ற அம்மையார் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுவதற்குத்தான் பொருள் நமக்கு விளங்கவில்லை."

(2010 செப். 1 முதலமைச்சர் கலைஞர் அறிக்கையிலிருந்து)


தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திங்களன்று (ஆக. 30) வெளியிட்ட அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தது ஜனநாயகமே இல்லை என்று கூறி, கம்யூனிஸ்ட்கள் மீது வசைபாடியுள்ளார். மேலும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் தான் ஆயுதங்களை வழங்குவது போலவும், தமிழகத்தில் அதுபோன்ற தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் மாயை உருவாக்க முயற்சித்தார்.


ஆனால், புதனன்று (செப். 1) வெளியிட்ட அறிக்கையில் கம்யூனிஸ்ட்டுகள் தனது நண்பர் எனவும், அவர்கள் தம் மீது கனல் கற்கவும் உரிமையுண்டு என்றும் அதே முதலமைச்சர் தான் கூறியிருக்கிறார்.இரண்டு நாட்களுக்கு முன் சிறுதாவூர் சீமாட்டியின் (சிறுதாவூர் நிலத்தை மீட்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பது மார்க்சிஸ்ட்டுகள் என்பது வேறு கதை) வெற்றிக்கு பாடுபடும் கம்யூனிஸ்ட்டுகள் திடீரென்று எப்படி நண்பர்கள் ஆனார்கள். அதுவும் தன் மீது கனல் கக்கும் உரிமை கொண்ட நண்பர்கள் ஆனதுதான் ஆச்சரியம்.


சரிப்பா 2 லட்சம் பேர்தான், அவர்களை முழு நேர ஊழியர்களாக்கி, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் கொடுத்தால் ஆண்டுக்கு ரூ. 1200 கோடி தான் செலவாகும். ஆனா, எந்தவொரு சத்துணவு ஊழியராவது தன் குடும்பம் பிரிந்திருந்த போது சேர்த்து வைக்க முயற்சித்தீங்களா? அப்படி செஞ்சிருந்தா உங்களுக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கியிருப்பாரில்லை.


தமிழ்நாட்டோட ஆண்டு மொத்த பட்ஜெட்டே 63 ஆயிரம் கோடி ரூபாதான், இதுல எங்கே ஒரு லட்சம் கோடி ஒதுக்க முடியும்னு கேட்கக் கூடாது.


இந்தியாவோட பட்ஜெட் 70 லட்சம் கோடிக்கு மேலே போகுது, அதுலேயிருந்து ஒரு லட்சம் கோடி எடுத்து குடுக்குறது பெரிய வேலையே இல்லை.


இல்லை இன்னொன்னாவது செஞ்சிருக்கனும். கூட ஒரு ஆயிரம் கோடி ஒதுக்குங்க, எங்களுக்கு போக மீதியை நீங்களே எடுத்துக்கங்ன்னாவது சொல்லியிருக்கனும்.


புதுசா வாங்குற இயந்திரங்களுக்குத்தான் கமிஷன் வைக்க முடியும், இல்ல வேற எதாவது கட்டடப் பணியாவது செய்யனும். உங்களுக்கு மட்டும் எப்படி ஆண்டு 1,200 கோடி ஒதுக்க முடியும்? அதுவும் அடுத்தடுத்தாண்டுகல்ல அதிகமாயில்லை போகும்.


யார் போராட்ட அறிவிப்பு செய்தாலும் உடனே அது சட்டவிரோதம், ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கேள்வி - பதிலோ, கடிதமோ, கவிதையோ உடனடியாக வந்துவிடுகிறது. அடக்குமுறை ஆரம்பித்துவிடுகிறது.


ஆனால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொமுச சார்பில் இதே சென்னையில் கோரிக்கை பேரணி நடைபெற்றது. அதுமட்டும் சட்டவிரோதம் இல்லையா? ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தவில்லையா?


என்ன செய்வது நாமும் நொந்து கொள்ள வேண்டியதுதான் "என்னடா ஊரிது ஆள்வோரை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள், மக்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.........!"


அதற்காக நொந்துகொண்டு சும்மா இருக்கக் கூடாது, வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்......


0 comments:

Ads 468x60px

Featured Posts