Thursday, June 3, 2010

யாராலும் தடுக்க முடியாது...!


'பஞ்ச்' டயலாக் இல்லை, குத்துப் பாட்டு இல்லை, அதிரடி சண்டை காட்சிகள் இல்லை இருந்தாலும் மர்மம் குறையாமல் இருந்தது. ஆம், ஒரு காதல் கதை புத்தகம் தான் இறுதி வரை விறுவிறுப்புடன் படிக்கத் தூண்டியது. பக்க அளவு குறைவு என்றாலும் கடைசி வரை ஒரே மாதிரியாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற ரீதியில் கதை அமைத்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
காதல் கதை என்றாலும், காதலியை காப்பாற்ற எந்த குண்டர்களுடனும் காதலன் சண்டையிடவில்லை. மாறாக மரணக் கோட்டையில் இருக்கும் காதலனை காப்பாற்ற காதலி செல்வதுதான் கதையின் ஹைலைட். இது உண்மையான காதலை உணர்த்துகிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கதாசிரியர் மரண கோட்டையை பார்க்கும் போது, ஒற்றை கண்ணுடைய ஒருவன் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை சொல்கிறான். ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் கோட்டை ஒன்றில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலிருந்து வெளிவந்தாலும் உயிருக்கு ஆபத்து, அங்கே இருந்தாலும் உணவு, தண்ணீர் இன்றி சாகவேண்டிய நிலை. அதில் மாட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைக்கார காதலனைக் காப்பாற்ற காதலி செல்கிறாள். அப்போது அங்கு நடக்கும் சம்பவங்களை மிகவும் சுவாரசியமாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.
அந்த மரணக் கோட்டையில் இருந்தவர்கள் இந்தியாவில் கொள்ளையடித்த பலகோடி மதிப்பிலான ரத்தினங்களை வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. பட்டினியால் சாவோரிடமிருந்து அந்த காதலனுக்கு அதிகளவில் ரத்தினங்கள் கிடைக்கின்றன.
கோட்டையில் இருந்து யாரேனும் வெளியே வந்தால் அவர்களை கொன்றுகுவிப்பதற்கு தயாராக ஒரு கும்பல் காத்துக்கொண்டிருந்தது. அந்த கும்பலின் நோக்கம் கோட்டையில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரத்தினங்களின் மீதுதான் இருந்தது.
இந்த நிலையில் காதலனைக் காப்பாற்ற காதலி வருகிறாள். அப்போது அந்த கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள். அந்த கும்பலிடமிருந்து தானும் தப்பித்து, தன்னுடைய காதலனையும் காப்பாற்றுகிறாள். இப்படியாக கதை நகர்கிறது.
தேள் கடித்த ஒட்டகத்தையும், காதல் வயப்பட்ட பெண்ணையும் யாராலும் தடுக்க முடியாது என்பது போன்ற வசனங்கள் வருவது சிறப்பம்சம்.
கதை சொன்ன ஒற்றைக் கண் உடையவனைப் பற்றி பின் இணைப்பாக கூறியிருப்பது கதையின் கிளைமேக்சைக் காட்டுகிறது. மலையாள எழுத்துலகில் போற்றத்தக்கவரும், ஞானபீட விருதுபெற்றவருமான எஸ்.கெ.பொற்றெக்காட் மலையாளத்தில் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை சுரா விறுவிறுப்பு குறையாமல், மிகவும் எளிய நடையில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஒரு காதல் கதை, வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன், 105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. பக். 80; விலை: ரூ. 40/-

0 comments:

Ads 468x60px

Featured Posts